Sunday, April 5, 2015

கேள்வி கேட்பது ஒரு கலை!

பதில் சொல்வதை விட கேள்வி கேட்பதற்கும் திறமை வேண்டும். குழந்தைகளுக்கு கேள்வி கேட்க கற்றுக் கொடுக்க தேவையில்லை. ஏனெனில் மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருக்கிறது. கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் வளர வளர கேள்வி கேட்பதை விட்டு விடுகிறோம். இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலுவலகம் என எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால் சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
கேள்வி கேட்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்திசாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது.
கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான். வகுப்பறை, அலுவலகம், பொது இடங்களில் கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
ஆனால் சிலர் மட்டுமே, சரியாகவும், துல்லியமாகவும் கேள்வி கேட்கின்றனர். எனவே கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொண்டால், பல வழிகளிலும் நமக்கு உதவும்.

வங்கி அதிகாரி விருத்தாசலம் விளக்குகிறார் எளிதில் கல்விக்கடன் பெறுவது எப்படி

"உரிய ஆவணங்கள் இருந்தால், உயர் கல்வி படிப்பதற்காக வங்கிகளில் எளிதில் கல்விக் கடன் பெற முடியும்" என மதுரை ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளர் விருத்தாசலம் தெரிவித்தார்.மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'கல்விக் கடன்' குறித்து அவர் பேசியதாவது:
நாட்டின் வலிமையை நிர்ணயிப்பது கல்வி. பணம் இல்லை என்பதற்காக ஒரு மாணவருக்கு கல்வி தடைபடக் கூடாது என்பதால் வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதில் 26 வகையான பொதுத்துறை வங்கிகள் தான் அதிக கல்விக் கடன் வழங்குகின்றன. அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பிற்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம்,வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. ரூ.4 லட்சம் வரையான கடனுக்கு பெற்றோர் உத்திரவாதம் தேவையில்லை. சிறப்பு பிரிவின் கீழ் ரூ. 8 லட்சம் வரை கடன் பெற்றால் 5 சதவீதம் முன்பணம் செலுத்தவேண்டும். வெளிநாட்டு படிப்பு என்றால் 15 சதவீதம் பணம் செலுத்த வேண்டும். படிப்பு முடிந்து ஓராண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வங்கிகளுக்குள் வட்டி விகிதம் மாறுபடும். மாணவிகளுக்கு அரை சதவீதம் வட்டி தள்ளுபடி உண்டு. பத்து ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதில் கல்விக் கடன் பெறலாம் என்றார்.
தேர்வில் 'பிட்' கலாசாரம் தமிழகத்தில் வந்தது எப்படி?
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. தமிழகத்தில், 8.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த தடவை பீகாரைப் போல பெருமளவில் காப்பி அடிக்கவில்லை என்ற ஆறுதல் இருந்தாலும், சில சம்பவங்கள்தமிழகத்தை அதிரச் செய்தன. இந்த ஆபத்தான கலாசாரம் எப்படி வந்தது?
இதை முற்றிலும் நீக்க முடியுமா என்பதற்கும் விடைகாண்பது சிரமம்.சமீப காலங்களில், தேர்வு முடிவுகளில், அதிக உச்சத்தை தொடவைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் மாணவ,மாணவியரை தேர்வுக்கு, இயந்திர கதியில் அதிக அளவில் இயங்க வைக்கின்றனர்.சமீபத்தில், 'வாட்ஸ் அப்' மூலம் வினா-விடை விவரங்களை தந்த அதிர்ச்சி தகவல் வந்த பின், பல விஷயங்களை, முன்னாள் ஆசிரியர்கள் தமிழகத்தில் வெளிப்படையாக பேசுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 'கொள்குறிவகை'யில் 30 மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு, ஏற்கனவே மாணவர்கள் சில தவறான உத்திகளை பின்பற்றும் வழக்கம், சில பள்ளிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.தேர்வு எழுதும் அறையில், நன்கு படிக்கும் தலையாய மாணவர் ஒருவர் அல்லது மாணவி,இக்கேள்விகளுக்கு ரகசிய சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் வழக்கம் இருக்கிறதாம்.தலையை தொட்டால், 'ஏ' என்ற விடை, மூக்கைத் தொட்டால், 'பி'சரியானது என்று சமிக்ஞை மூலம், 'பிட்' பாணிக்கு முன்னோட்டமாக இந்த முறை இருக்கிறதாம். இதை தேர்வு கண்காணிப்பாளர் எப்படி தடுக்க முடியும்?
கல்வி ஒருவியாபாரமாக ஆன அடையாளத்தின் ஒரு கூறு இது என்று பலரும் கூறலாம்.'வாட்ஸ் அப்' மூலம் பரவிய கலாசாரத்தை, இனி அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 20 தேதிக்குள் முடிந்து விடும் என்றும், அதற்குப்பின் வெளிவரும்முடிவுகளில், அதிகம் பேர்ரேங்க் பட்டியலில் முன்னணியில் நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.அத்துடன் மற்றொரு நல்ல அம்சமாக, புதிய சூழ்நிலைவரும் அறிகுறிகள் காணப்படுகின்றன.தமிழகத்தில் அதிகமாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை மற்றும் அதிககட்டண வசூல் இத்தடவை குறையும் என கூறப்படுகிறது. காரணம், முன்னணிகல்லூரிகள் கூட, சில துறைகளில், முழு அளவில் இடங்களை நிரப்ப முடியவில்லை.
மேலும் பல கல்லூரிகளில் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் அதிக அனுபவத் தகுதி பெற வேண்டிய நிலை முற்றிலும் உருவாகவில்லை. அதிலும் சீர்திருத்தம் வரவேண்டும்.அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் போட்டி போடும் சூழ்நிலை, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறதா என்று எடைபோடும் காலம் வருகிறது. வேலைவாய்ப்பு தரும் கல்வி எது என்று ஆராயும் வகையில் சமுதாயம் சிந்திப்பது நல்ல அறிகுறி. அதை நோக்கி உயர் கல்வி சீராகப் போகிறது என்பதும் நல்ல அடையாளமாகும்.