Friday, March 27, 2015

வந்தாச்சு பிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்!
'பிட் அடித்து வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் பெயில் ஆகி போவார் 'என்ற பிட்டுலகின் பொன்மொழியில் நவீன பொன்மொழி 'அகர முதல பிட்டெல்லாம் வாட்ஸ் அப் பிட்டாகுமா? 'என்பதே. லேட்டஸ்ட் technology என நாம் நினைத்திருப்பதை சீனர்கள் சில வருடங்களுக்கு முன்னரே செய்து விட்டார்கள். நாம்தான் இதிலும் லேட்.
உலகிலேயே சீனாவில் உள்ள மாணவர்கள்தான் மிகவும் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி (HI TECH), பரீட்சையில் பிட் அடிக் கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம்தான் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்(007) ஜாக்கெட் உள்ளதாம். அதில் சிறிய கேமரா, தொலைபேசி, ஒட்டுக் கேட்கும் கருவி (காதுக்குள் மாட்டுவது) எல்லாம் இருக்கிறது.
மேலும் சிறிய ரக பேனாவில் உள்ள கேமராவில் பரீட்சைப் பேப்பரை அப்படியே படம் எடுத்து, வெளியே உள்ள நபர்களுக்கு அனுப்புகிறார்கள். வெளியே உள்ள நபர்கள் அதனை வாசித்து, உடனே பதிலை சொல்ல, காதுகளில் உள்ள சிறிய உள்வாங்கியில் அதனைக் கேட்டு எழுதுகிறார்கள் மாணவர்கள்.
இதற்கு மேல் ஒரு படி மேலேபோய், புற ஊதாக் கதிர்கள்(அல்ரா வைலட்) பேனாக்களை கொண்டு, விடை களை கைகளில் எழுதிக்கொண்டு, தேர்வு அகு சென்றுவிடுகிறார்களாம்பேனாவில் உள்ள புற ஊதாக் கதிர்களை கண்டறியும் லைட்டை அடித்து பார்த்தால் கைகளில் உள்ள விடை தெரிந்துவிடுமாம். ஆனால் இவர்கள் கைகளில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சாதாரண கண்களால் பார்த்தால் எதுவும் தெரியாது.
இப்படி அதி கூடிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து பிட் அடிக்கிறார்கள் சீன மாணவர்கள். இதனால் சீனாவில் பெரிய பரீட்சைகள் நடக்கும்போது போலீசார் அழைக்கப்பட்டு பலத்த சோதனைகள் நடத்தப்பட்டு, இதன் பின்னரே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
பரீட்சைக்கு எப்படி பிட் அடிக்க முடியும் என்று சொல்லித்தர மற்றும் அதற்கான பொருட்களை விற்க என்று அங்கே பல கடைகள் உள்ளனவாம்.
இதற்காக நம்நாட்டின் பிட்டுலகின் பிதாமகர்கள் அங்கே போய் பயிற்சி எடுக்க நினைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

Saturday, March 7, 2015

கல்லூரிக்கு அட்மிஷன் போடவேண்டாமா?
அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில் அவசியமாகிறது.
ஆங்கிலம் அல்லது தமிழ் போன்ற மொழித் தேர்வுகளில் கூட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்றாலும் குரூப் பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவது தான் கனவை நனவாக்கும். ஆகவே எல்லா தேர்வுகளுமே முக்கியம் என்ற மனோபாவத்தோடு இருப்பது வேண்டும்.
இன்று கட் ஆப் மதிப்பெண்கள் பார்த்துத் தான் கல்லூரி அட்மிஷன் தரப்படுகிறது என்பதால் மிகச் சரியாக திட்டமிட்டு, சரியான யுக்தியுடன், புத்தி சாதுரியத்துடன் தேர்வை அணுகி எல்லாப் பாடங்களிலும் அதிக பட்ச மதிப்பெண் பெற எல்லா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இது மாணவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் குறுக்கு வழியில் பார்த்துக் கொள்ளலாம். பணம் கட்டி சீட் வாங்கி விடலாம் என்ற ஈஸி மனப்பாங்கு நிச்சயம் வேண்டாம்.
உங்கள் பெயர் பள்ளி பலகையிலோ, பத்திரிகையிலோ வராது போகலாம். ஆனால் அதற்காக ஆசைப்பட்டால் என்ன தவறு? எது செய்தாலும் நான் அதில் சிறந்து விளங்குவேன் என்பதே மிக நல்ல மனோபாவம். நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றால் உங்களுக்கு மட்டுமா பெருமை ? உங்கள் குடும்பத்திற்கு, ஆசிரியருக்கு, பள்ளிக்கு, உங்கள் மாநிலத்திற்கே பெருமை அன்றோ?
பள்ளி இறுதித் தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்நாள் முழுதும் எல்லா இடங்களிலும் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்த படிப்பிற்கு, செல்லும் வேலைக்கு என்று எல்லா கட்டங்களிலும் உங்களை முன்னிலை படுத்தப் போகிற ஒரு தேர்வு இது என்பது மனதில் இருக்கட்டும். அதனை நினைவில் கொண்டு உங்கள் செயல்பாடுகள் அமையட்டும்.
இது போட்டி யுகம் நூற்றுக்கு நூறு என்பது கூட சற்று குறைவு தான் எனும் நிலை ஆகி விட்டது. எனவே நீங்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல என்று உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருக்கும் உலகுக்கும் நிரூபிக்கும் மிக முக்கிய சமயம் இது. பெஸ்ட் மட்டுமே கொடுங்கள். பெஸ்ட் மட்டுமே கிடைக்கும். சந்தேகம் வேண்டாம்.
எனவே மிகப் பெரிய வெற்றி உங்களுக்கு வரும் தேர்வில் கிடைக்க வேண்டுமா? ஒழுக்கமாக இருங்கள்...

Monday, March 2, 2015

பள்ளியை மாணவன் தேர்ந்தெடுக்க வேண்டுமா? மாணவனை பள்ளி தேர்ந்தெடுக்க வேண்டுமா? ....
சமீபத்தில் நான் சந்தித்த பெற்றோர்கள் சிலரின் பேச்சு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிக்க வைக்கத்தான் குழந்தைகளையே பெற்றுக்கொண்டார்கள் போல இருக்கிறது.
அவர்கள் பேச்சிலிருந்து அப்படித்தான் உணர்ந்தேன்.
ப்ரீ கே.ஜி அட்மிஷன் கிடைத்த அன்று அவர்கள் தங்கள் பிறவிப்பயனை அடைந்துவிட்டது போல நடந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு லட்சியம் இருக்கிறது. அது பணம் சேர்ப்பதாக இருக்கலாம். சிறந்த தலைமுறையை உருவாக்குவதாக இருக்கலாம்.
அதே போல ஒவ்வொரு பெற்றொருக்கும் தன் குழந்தைகள் குறித்து ஒரு கனவு இருக்கிறது. அது அதிகம் பணம் சம்பாதிப்பவனாக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். அல்லது அந்த தலைமுறையிலேயே தலைசிறந்தவராக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் லட்சியத்தை நிறைவேற்றித்தரும் கல்வி நிலையத்தையே நாடுகிறார்கள்.
மார்க் பள்ளிகளுக்கே மவுசு அதிகம்
பெரும்பாலான பெற்றோர்கள் அவநம்பிக்கையிலிருந்துதான் முடிவெடுக்கிறார்கள். "நாம்தான் சரியாக படிக்கவில்லை. நம் குழுந்தைகளுக்கு நல்ல கல்வியை தந்துவிட்டால் நாம் படும் கஷ்டமெல்லாம் அவர்கள் படமாட்டார்கள்" என்று உறுதியாக நினைக்கிறார்கள்.
கல்விக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் பெரிய தொடர்பில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது படித்துவிட்டால் பொருளாதார ரீதியாக ஒரளவு நிச்சய வெற்றி என்று நம்புகிறார்கள்.
அதனால் மார்க் எடுக்க வைத்து மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பும் பள்ளிகள்தான் பலரின் முதல் தேர்வு.
அடுத்தது சமூக அந்தஸ்து.
ஈரோட்டில் ஒரு சமூகத்தில் யாராவது மரணமடைந்துவிட்டால் எல்லோருக்கும் எளிதாக தெரிவிக்க மரண அறிவிப்பு செய்வார்கள். கடைசி வரியில் பிரிவால் வாடுபவர்கள் பட்டியல் இருக்கும். அதில் எல்.கே.ஜி படிக்கும் பேரன் பெயர் அவன் படிக்கும் பள்ளியின் பெயரோடு வரும்.
காரணம் விசாரித்தபோது சொன்னார்கள் , "டாக்டர் என்பதை எப்படி கௌரவத்திற்காக போட்டுக்கொள்கிறோமோ அதே போல அந்தப் பள்ளியில் படிப்பது ஒரு கௌவரம் இல்லையா? அதனால்தான் அப்படி போட்டுக்கொள்கிறோம்."
அரசுப்பள்ளிகளை பலரும் தவிர்ப்பதற்கு கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு மட்டும் காரணமில்லை. கௌரவம்?
இதைப்புரிந்து கொள்ள உங்கள் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்கிறது என்று ஐம்பது பேரிடம் சொல்லிப்பாருங்கள். உங்களைப் புழுவைப்போல பார்ப்பார்கள்.
பல பெற்றோர்களுக்கு பள்ளி என்பது அவர்கள் சமூக அந்தஸ்தை சொல்லும் ஒன்று.
அடுத்தது தீண்டாமை
தங்கள் குழந்தைகள் எந்த மாதிரியான குழந்தைகளோடு பழக வேண்டும் என்பதும் கல்வி நிலையத்தை தீர்மானிக்கிற விஷயமாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களோடு அல்லது சாதாரணப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களோடு படித்தால் தகாதவார்த்தைகள் (Bad Words) பேசக்கற்பார்கள் என்று தீண்டாமையை வேறுவிதமாக சொல்வார்கள்.
இதெல்லாம் பெற்றோர்கள் கல்வி நிலையத்ததை தேர்ந்தெடுக்கும் விதம்.
அடுத்து கல்வி நிலையங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்.
முதலிடம் பணத்திற்குத்தான்.
பெற்றோர்கள் விரும்பும் வசதிகளை ( நன்றாக கவனியுங்கள் மாணவர்கள் விரும்பும் வசதியை அல்ல) செய்துவிட்டு அதற்கு ஏற்ற கட்டணத்தை தருகிற பெற்றொர்களின் குழுந்தைகளுக்குத்தான் முதலிடம்.
அடுத்து முதலுக்கு முதலிடம்
முதலிடம் உங்களுக்கு தெரியும். இரண்டாமிடம் கூட உங்களுக்கு தெரியும். ஆனால் முதலுக்கு முதலிடம் உங்களுக்குத் தெரியாது. அது கல்வி நிலையம் நடத்துகிறவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அதாவது போட்ட முதலுக்கு ஏற்ற கூடம் வரவேண்டும் என்பதால் விருப்பம் இல்லாமல் சிலரை சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் பணம் கட்ட முடியாவிட்டாலும் நல்ல மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் மாநிலத்தில் முதலிடம் என பெயர் எடுத்து தங்கள் பள்ளிக்கு நல்ல அட்மிஷனை சேர்த்துக்கொடுக்க கூடிய நன்றாக படிக்கும் மாணவர்கள்.
அரசுப்பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் இலவசமாக சேர்த்துக்கொள்வது இவ்விதம்தான்.
அடுத்த இடம் நன்றாகப் படிக்கும் மாணவர்கள்.
நன்றாகப்படிக்க வைக்கத்தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று நீங்கள் பழங்கதை பேசலாம். இன்றைக்கு பல பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கத் தெரிந்தவர்களுக்கு பாடம் நடத்துகிற அளவுக்குத்தான் தெரியும். அதனால் நன்றாகப் படிக்கக்கூடியவனா என்று சோதித்துத்தான் சேர்த்துக்கொள்வார்கள்.
அடுத்தது ஆசிரியப் பெற்றோர்கள்.
அதாவது பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலும் படிக்க வைக்க வேண்டும்.
எப்போதாவது கரும்பு ஜீஸ் கடையில் கரும்பு பிழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? சக்கையாகும் வரை பிழிவார்கள். சரி நைந்து விட்டது தூக்கிப்போட்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கும்போது அதையும் பிழிவார்கள். அதைப்போல இவர்கள் நைந்து போகும் அளவிற்கு பள்ளியில் கற்றுத்தருவார்கள். அதன் பிறகு கசங்கிப்போகும் வரை குழந்தைகளை வீட்டிலும் வைத்து பிழியத் தெரியும் வித்தை தெரிந்த பெற்றோர்களாய் இருந்தால் சீட் நிச்சயம்.
இன்று பெற்றோர்கள் சில பள்ளிகளுக்கு ஆசைப்படுகிறார்கள். அலையாய் அலைகிறார்கள். அட்மிஷனுக்கு ஆள்பிடிக்கிறார்கள். பணத்தை கொட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகள்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
பாடப் பரிவுகளை தேர்ந்தெடுப்பது போல, என்று மாணவர்கள் பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வருகிறதோ ? அன்றுதான் மாணவர்களுக்கு பிடித்த மாதிரி சுவைபட கல்வியை வழங்கும் முயற்சிகளை பள்ளிகள் மேற்கொள்ளும்.