Monday, March 2, 2015

பள்ளியை மாணவன் தேர்ந்தெடுக்க வேண்டுமா? மாணவனை பள்ளி தேர்ந்தெடுக்க வேண்டுமா? ....
சமீபத்தில் நான் சந்தித்த பெற்றோர்கள் சிலரின் பேச்சு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிக்க வைக்கத்தான் குழந்தைகளையே பெற்றுக்கொண்டார்கள் போல இருக்கிறது.
அவர்கள் பேச்சிலிருந்து அப்படித்தான் உணர்ந்தேன்.
ப்ரீ கே.ஜி அட்மிஷன் கிடைத்த அன்று அவர்கள் தங்கள் பிறவிப்பயனை அடைந்துவிட்டது போல நடந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு லட்சியம் இருக்கிறது. அது பணம் சேர்ப்பதாக இருக்கலாம். சிறந்த தலைமுறையை உருவாக்குவதாக இருக்கலாம்.
அதே போல ஒவ்வொரு பெற்றொருக்கும் தன் குழந்தைகள் குறித்து ஒரு கனவு இருக்கிறது. அது அதிகம் பணம் சம்பாதிப்பவனாக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். அல்லது அந்த தலைமுறையிலேயே தலைசிறந்தவராக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் லட்சியத்தை நிறைவேற்றித்தரும் கல்வி நிலையத்தையே நாடுகிறார்கள்.
மார்க் பள்ளிகளுக்கே மவுசு அதிகம்
பெரும்பாலான பெற்றோர்கள் அவநம்பிக்கையிலிருந்துதான் முடிவெடுக்கிறார்கள். "நாம்தான் சரியாக படிக்கவில்லை. நம் குழுந்தைகளுக்கு நல்ல கல்வியை தந்துவிட்டால் நாம் படும் கஷ்டமெல்லாம் அவர்கள் படமாட்டார்கள்" என்று உறுதியாக நினைக்கிறார்கள்.
கல்விக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் பெரிய தொடர்பில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது படித்துவிட்டால் பொருளாதார ரீதியாக ஒரளவு நிச்சய வெற்றி என்று நம்புகிறார்கள்.
அதனால் மார்க் எடுக்க வைத்து மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பும் பள்ளிகள்தான் பலரின் முதல் தேர்வு.
அடுத்தது சமூக அந்தஸ்து.
ஈரோட்டில் ஒரு சமூகத்தில் யாராவது மரணமடைந்துவிட்டால் எல்லோருக்கும் எளிதாக தெரிவிக்க மரண அறிவிப்பு செய்வார்கள். கடைசி வரியில் பிரிவால் வாடுபவர்கள் பட்டியல் இருக்கும். அதில் எல்.கே.ஜி படிக்கும் பேரன் பெயர் அவன் படிக்கும் பள்ளியின் பெயரோடு வரும்.
காரணம் விசாரித்தபோது சொன்னார்கள் , "டாக்டர் என்பதை எப்படி கௌரவத்திற்காக போட்டுக்கொள்கிறோமோ அதே போல அந்தப் பள்ளியில் படிப்பது ஒரு கௌவரம் இல்லையா? அதனால்தான் அப்படி போட்டுக்கொள்கிறோம்."
அரசுப்பள்ளிகளை பலரும் தவிர்ப்பதற்கு கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு மட்டும் காரணமில்லை. கௌரவம்?
இதைப்புரிந்து கொள்ள உங்கள் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்கிறது என்று ஐம்பது பேரிடம் சொல்லிப்பாருங்கள். உங்களைப் புழுவைப்போல பார்ப்பார்கள்.
பல பெற்றோர்களுக்கு பள்ளி என்பது அவர்கள் சமூக அந்தஸ்தை சொல்லும் ஒன்று.
அடுத்தது தீண்டாமை
தங்கள் குழந்தைகள் எந்த மாதிரியான குழந்தைகளோடு பழக வேண்டும் என்பதும் கல்வி நிலையத்தை தீர்மானிக்கிற விஷயமாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களோடு அல்லது சாதாரணப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களோடு படித்தால் தகாதவார்த்தைகள் (Bad Words) பேசக்கற்பார்கள் என்று தீண்டாமையை வேறுவிதமாக சொல்வார்கள்.
இதெல்லாம் பெற்றோர்கள் கல்வி நிலையத்ததை தேர்ந்தெடுக்கும் விதம்.
அடுத்து கல்வி நிலையங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்.
முதலிடம் பணத்திற்குத்தான்.
பெற்றோர்கள் விரும்பும் வசதிகளை ( நன்றாக கவனியுங்கள் மாணவர்கள் விரும்பும் வசதியை அல்ல) செய்துவிட்டு அதற்கு ஏற்ற கட்டணத்தை தருகிற பெற்றொர்களின் குழுந்தைகளுக்குத்தான் முதலிடம்.
அடுத்து முதலுக்கு முதலிடம்
முதலிடம் உங்களுக்கு தெரியும். இரண்டாமிடம் கூட உங்களுக்கு தெரியும். ஆனால் முதலுக்கு முதலிடம் உங்களுக்குத் தெரியாது. அது கல்வி நிலையம் நடத்துகிறவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அதாவது போட்ட முதலுக்கு ஏற்ற கூடம் வரவேண்டும் என்பதால் விருப்பம் இல்லாமல் சிலரை சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் பணம் கட்ட முடியாவிட்டாலும் நல்ல மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் மாநிலத்தில் முதலிடம் என பெயர் எடுத்து தங்கள் பள்ளிக்கு நல்ல அட்மிஷனை சேர்த்துக்கொடுக்க கூடிய நன்றாக படிக்கும் மாணவர்கள்.
அரசுப்பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் இலவசமாக சேர்த்துக்கொள்வது இவ்விதம்தான்.
அடுத்த இடம் நன்றாகப் படிக்கும் மாணவர்கள்.
நன்றாகப்படிக்க வைக்கத்தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று நீங்கள் பழங்கதை பேசலாம். இன்றைக்கு பல பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கத் தெரிந்தவர்களுக்கு பாடம் நடத்துகிற அளவுக்குத்தான் தெரியும். அதனால் நன்றாகப் படிக்கக்கூடியவனா என்று சோதித்துத்தான் சேர்த்துக்கொள்வார்கள்.
அடுத்தது ஆசிரியப் பெற்றோர்கள்.
அதாவது பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலும் படிக்க வைக்க வேண்டும்.
எப்போதாவது கரும்பு ஜீஸ் கடையில் கரும்பு பிழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? சக்கையாகும் வரை பிழிவார்கள். சரி நைந்து விட்டது தூக்கிப்போட்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கும்போது அதையும் பிழிவார்கள். அதைப்போல இவர்கள் நைந்து போகும் அளவிற்கு பள்ளியில் கற்றுத்தருவார்கள். அதன் பிறகு கசங்கிப்போகும் வரை குழந்தைகளை வீட்டிலும் வைத்து பிழியத் தெரியும் வித்தை தெரிந்த பெற்றோர்களாய் இருந்தால் சீட் நிச்சயம்.
இன்று பெற்றோர்கள் சில பள்ளிகளுக்கு ஆசைப்படுகிறார்கள். அலையாய் அலைகிறார்கள். அட்மிஷனுக்கு ஆள்பிடிக்கிறார்கள். பணத்தை கொட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகள்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
பாடப் பரிவுகளை தேர்ந்தெடுப்பது போல, என்று மாணவர்கள் பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வருகிறதோ ? அன்றுதான் மாணவர்களுக்கு பிடித்த மாதிரி சுவைபட கல்வியை வழங்கும் முயற்சிகளை பள்ளிகள் மேற்கொள்ளும்.

No comments:

Post a Comment