Thursday, February 19, 2015

பாலியல் குற்றங்களின் பங்காளி மொபைல்போன்...!
'6ம் வகுப்பு மாணவி கொலை: சக மாணவன் கைது; எல்.கே.ஜி., மாணவி, பள்ளி வளாகத்தில் பலாத்காரம்; ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த மாணவன் கொலை: நண்பனுக்கு வலை; 9ம் வகுப்பு மாணவி, காதலனுடன் மாயம்; பள்ளிச் சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் கைது!' -இவை எல்லாம், சமீபகாலமாக நாளிதழ்களில் இடம்பிடித்த, பாலியல் வன்மச் செய்திகள் சிலவற்றின் தலைப்புகள். இந்த அவலச்செய்திகளை வாசிக்கும் பலரின், குறிப்பாக, பெற்றோரின் மனதில் ஒருவித அச்சமும், பீதியும் எழுகிறது.
பால்மணம் மாறா பள்ளிப் பிஞ்சுகளிடம் கூட, பாலியல் வன்மத்தில் ஈடுபடும் படுபாதக பாவிகளை, நீதியின் முன்நிறுத்தி, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில், எள்முனையளவும் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அதேவேளையில், இதுபோன்ற பாலியல் வக்கிர குற்றங்களின் எண்ணிக்கை கூடுவதற்கான காரணிகளை யாரும் ஆராய்வதில்லை. பாலியல் வன்மம் பரவ, குற்றவாளிகள் மட்டுமா காரணம்? இந்த சமூகமும், சமூகத்தை வழிநடத்தும் அரசு அமைப்பும் தான். இன்றைய இளைஞர்களை, குறிப்பாக, பிஞ்சுகளின் மனதை நஞ்சாக்கும் விதமான பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய, அனைத்து, 'ஆபாச கருமாந்திர காட்சி'களும் கையடக்க சாதனத்திலேயே கண்டுகளிக்கும் வசதிகளும் பெருகிவிட்டன. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, ஆபாச படங்கள், ஊர், ஊருக்கு குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டும், 'காலைக் காட்சி'யாக காண்பிக்கப்படும்; 'திரையிடல் விதி'களை மீறி மைனர்களும் போவர்.
எனினும், அந்த துணிச்சல் எல்லாருக்கும் வந்துவிடாது. மதுப்பழக்கமும், அன்றைய இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் இவ்வளவு வெளிப்படையாக இருந்ததில்லை. பாலியல் குற்றங்களும் அதிகம் தலை தூக்கவில்லை. இன்றோ, நிலைமை மிகவும் மாறிவிட்டது. 'பாஸ் மார்க்' எடுக்கும் அளவுக்காவது படித்து, மானத்தை மகன் காப்பாற்றுவான் என, பள்ளிக்கு பிள்ளையை அனுப்பி வைத்தால், 'டாஸ்மாக் பாரில்' மது குடித்து மயங்கிக் கிடக்கும் அவலம் இந்த மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தெருவுக்குத் தெரு திறந்து கிடக்கும் மதுக்கடைகள், மனித குலத்தின் மாண்பை கெடுக்கின்றன; மானத்தை வாங்குகின்றன.
இளைஞர்களை சீரழிக்க இதுபோதாதென்று, மொபைல்போன், இன்டர்நெட் வசதிகள் வேறு. அன்பான பிள்ளைகள் ஆசையாக கேட்கின்றனரே என்று, அதிக விலை மொபைல்போனை வாங்கிக் கொடுத்து அகமகிழ்ந்து கொள்கிறோம். அந்த சாதனத்தை, பிள்ளைகள் எப்படி, எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.கேட்ட போதெல்லாம், 'பாக்கெட் மணி' கொடுத்து, படுபாதாளத்தில் பிள்ளைகள் விழ பாதையும் வகுத்துக் கொடுத்து விடுகிறோம். கையடக்க அலைபேசியில், பரவிக்கிடக்கும் வலைதள ஆபாசங்களை கண்டுகளிக்கும் பிள்ளைகள், காமத்தால் தூண்டப்பட்டு, பாலியல் உறவுக்கு உந்தப்படுகின்றனர். படிப்பதென்ற லட்சியத்துடன் பள்ளியில் சேர்ந்ததை மறந்து, பாடப்புத்தகங்களும் அவர்களுக்கு பாரமாகிப் போகின்றன. பாலியல் வக்கிரத்துக்கு வடிகால் தேடி அலைகையில், அருகிலிருப்போர் அகப்படுகின்றனர். சிறுமியராக இருப்பினும், அவர்களை சீரழிக்க துணிகின்றனர். அதற்கேற்ப, நண்பர்களும் சேர்ந்து விட்டால், நாசமாகிப் போவது வெகுவிரைவில் நடந்தேறுகிறது.
இதற்கெல்லாம் காரணம்... கட்டுப்பாடற்ற சுதந்திரம்; கண்காணிப்பு சிறிதுமற்ற வசதி வாய்ப்புகள்; இவற்றை வாரி வழங்கும் பெற்றோர்.முந்தைய நாட்களில், பள்ளி முடிந்து, மாலையில் சரியான நேரத்தில் வீடு திரும்பிய பிள்ளை... நாளடைவில் தாமதமாக வருவதை பற்றியோ, அவனது தோழமைத் தொடர்புகள் பற்றியோ, பெற்றோரில் பலரும் போதிய அக்கறை காட்டுவதில்லை; அதற்கான நேரமுமில்லை. சதா பொருளாதார கணக்குப் பார்த்து, குடும்பத்துக்கு கூடுதல் பொருள் தேடுவதிலேயே வாழ்க்கையை கழித்து வருகின்றனர். நிலைமை எல்லை மீறிப்போகும்போதுதான் புத்திக்கு உரைக்கிறது, பிள்ளைகள் புதைகுழியில் விழுந்துவிட்டனர் என்று.சாலையோர மரக்கன்றுகளை வளர்க்கும் போது கூட, அவற்றை ஆடு, மாடு மேய்ந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் கூண்டமைத்து கண்காணிக்கிறோம். நமது எதிர்கால, 'கனவுப் பிள்ளை'களை வளர்ப்பதில், கொஞ்சமாவது அக்கறை வேண்டாமா, கண்காணிக்க வேண்டாமா?
பிள்ளைகளின் எதிர்காலம் பாழாய் போக, அவன் அல்லது அவள் மட்டும் காரணமல்ல; இந்த அரசும், சமூகமும் தான். குற்றங்களிலும் இவர்கள் மறைமுகமாக அங்கம் வகிக்கின்றனர் என்பது தானே கண்ணுக்கு புலப்படாத உண்மை. இந்த மறைமுக குற்றப் பங்காளிகளை யார் தண்டிப்பது? பாக்கெட் மணி கேட்கும்போது, முந்தைய நாள் வாங்கிய பணத்தை எதற்காக செலவழித்தனர் என, விசாரியுங்கள். பள்ளி, கல்லூரி முடிந்து, வழக்கத்துக்கு மாறாக, தாமதமாக வீட்டுக்கு வரும் பிள்ளைகள், 'எங்கே போயினர்?' என ரகசியமாக தகவல் சேகரியுங்கள்.
'என்ன படிப்பு படித்தால், எவ்வளவு நோட்டு எண்ணலாம்' என யோசிப்பதுடன், பிள்ளைகளை எப்படி ஒழுங்காக வளர்ப்பது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளிப்பதும், கண்காணிப்பற்ற நிலையில், நவீனவசதி வாய்ப்புகளை வாரி வழங்குவதும் ஆபத்தில் முடியலாம். பிள்ளைகள் நல்லவர்கள்; அவர்கள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு.

No comments:

Post a Comment