Thursday, February 19, 2015

சிறந்த கற்றலுக்கு ஏற்ற சூழல் எது ?
பத்தாம் வகுப்பு .வினாத்தாளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வினாவாக தேர்வு செய்து பயிற்சி செய்துக்கொண்டிருந்தேன்.
ஆங்கிலம் இரண்டாம் தாள்.
மேம் இது எப்படி எழுதறது மேம் என்று வந்தான் ஒரு மாணவன்.
அவன் பின்னே கேட்க தயங்கிக் கொண்டு இருவர் வந்தனர்.
இது பல முறை பயிற்றுவித்த வினா தான். இருந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடல் அமைக்க வேண்டும் என்றவுடன் நம் பிள்ளைகள் பயந்து விடுகின்றனர்.
உரையாடல் எளிமையாக இருந்தால் போதும்.
உரையாடல் என்பது நம் எண்ணத்தை மற்றவரிடம் பகிரவே, நாம் சொல்ல வருவது அவர்களுக்கு புரிந்தால் போதும் என்பதை பல முறை எடுத்துரைத்தும் அவர்களின் தயக்கம் விட்டபாடில்லை.
அதெல்லாம் நன்றாக படிக்கும் பிள்ளைகள் மட்டுமே எழுத முடியும் என்று நினைத்து சற்று சுமாராக படிக்கும் பிள்ளைகள் தொடுவதேயில்லை.
எல்லா வினாக்களுக்கும் விடை எழுத முயற்சிக்க வேண்டும் என்று சொன்னாலும் இந்த உரையாடல் வினாக்கள் 9,10 இரண்டையும் விட்டுவிடுகின்றனர்.
இது வரை வந்த எல்லா வினாத்தாளிலும் கேட்கப்பட்ட மாதிரி வினாக்களை பயிற்றுவித்தும் இந்த நிலை !எப்படி இவர்களுக்கு இதை கற்பிப்பது ?
நான்கு பிள்ளைகளை அழைத்தேன் கிளம்புங்க என்றேன்.
எங்கே என்றெல்லாம் கேட்காமல் கிளம்பினர் .(அதுதான் ஆசிரியர் தொழிலின் புனிதம் !)
பாதி வழி சென்றதும் சொன்னேன்.
நீங்க கடையில் சென்று ஏதாவது பொருள் வாங்கணும் அதை இங்கிலீஷ் ல பேசி தான் வாங்கணும் என்றேன்.
தங்களுக்குள் கிசுகிசுத்து விட்டு சரிங்க மேம் என்றனர்.
கடைக்காரரிடம் சொன்னேன் .
பசங்க இங்கிலீஷ் பேசுவாங்க நீங்க தமிழே பேசலாம்.அவங்களுக்கு உரையாடல் பயிற்சிக்காக அழைத்து வந்திருக்கிறேன் என்றேன். கடைக்காரரும் ஓகே என்றார்.
நம்ம பையன் ஆரம்பித்தான்.
I want a scale
கடைகாரர் :Long or short ? என்றார்.
Long size !என்றான்.
கடைக்காரர் 'இந்தாப்பா 'என்றார் தமிழுக்கு தாவி !
How much ?என்றான்.
கடைக்காரர் விலையை சொன்னார் .
தேங்க்ஸ் சொல்லி வாங்கி கொண்டான் வெற்றி புன்னகையுடன்!
அடுத்து ஜெகதீஷ் வந்தான்.
நீ என்ன வாங்கறே என்றேன்.
சமோசா என்றான் .
சிரித்து விட்டோம் அனைவரும் .
அதை போகும் போது வாங்கி தருவேன் .இப்போ ஒழுங்கா பேனா வாங்கு என்றேன் .
சரிங்க மேம் என்று பேனா வாங்கினான் .
நால்வரும் பேசி முடித்ததும் கடைக்காரரிடம் நன்றி சொல்லி சமோசா வாங்கி கொடுத்து கூட்டி வந்து ,வரும் வழியில் கேட்டேன், இப்போ புரிஞ்சுதா அந்த டயலாக் எப்படி எழுதணும்னு ?என்றேன் .
ம் சூப்பரா புரிஞ்சது மேம் .இனிமே கொஞ்சம் பெருசா கூட படிச்சு எழுதிடுவோம் என்றனர் நம்பிக்கையுடன் .
சிலவற்றை கற்பிக்க வகுப்பறை சூழலை விட உண்மையான சூழலே கைக்கொடுக்கிறது என்று எண்ணியபடி நடந்தேன் நான் !
அனுபவ பகிர்வு :
திருமதி.D.விஜயலட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்

No comments:

Post a Comment